விலைவாசியைக் கட்டுப்படுத்த போவது யாரு?
விலைவாசி அதிவேகத்தில் உயர்ந்துவருகிறது. உயரும் விலை என்றுமே குறைந்ததில்லை என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரிந்த உண்மை. தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், மத்திய மந்திரி கபில் சிபல், "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் மத்திய அரசிடமில்லை" எனக் கூலாகத் தெரிவித்துவிட்டார். அவரின் பொறுப்பற்ற பேச்சு எப்படி இருக்கு தெரியுமா?
ஒரு காலத்தில் ரஷ்யாவில் கடும் பஞ்சம் நிலவிய போது அந்நாட்டை ஆண்ட மன்னரின் மஹாராணியார், "மக்கள் உள்கொள்ள உணவு இல்லை என்றால் கேக்கை சாப்பிடச் செல்லுங்கள்," என்றாராம். அது போல தான் கபில் சிபலும் பேசிவருகிறார். வறுமையைப் பற்றி சற்றும் தெரியாத தலைவர்கள் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகின்றனர். சம்பளமாக சில ஆயிரங்களையும் பல லட்சங்கள் மதிப்புள்ள சலுகைகளை அனுபவித்துவரும் அவருக்கு எப்படி வறுமையில் வாடும் மக்களின் கஷ்டம் தெரியும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவில் உள்ள ஒரு சில பணக்காரர்களுக்கு மட்டும் ஆதரவாகவே செயல்படுகிறது. பணக்காரர்களைப் பட்டியலிடும் அமெரிக்காவின் `ஃபோர்ப்ஸ்' பத்திரிகையில், அவர்களும் முன்னேறிய வண்ணமாகவே இருக்கின்றனர். சில பணக்காரர்கள் ஓட்டுப் போட்டால் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்று விடுமா? இன்று விலைவாசி உயர்ந்துவிட்டதாகக் கத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் தான் `ஆன்-லைன்' வர்த்தகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அதனால் தான் அவர்கள் `ஆன்-லைன்' வர்த்தக விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கின்றனர்.
வரும் தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைய போது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அடுத்து ஆட்சி செய்ய வரும் பாரதிய ஜனதாவும் இதே பணக்காரர்களுக்குச் சாதகமான கொள்கையைத் தான் கடைப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

